நிரந்தர நியமனம் கோரி ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத்தினரால் வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது காலத்தை வீணடிக்காதே, நிரந்தர நியமனத்தை உடன் வழங்கு, கதைத்தது காணும் உறுதி மொழியை நிறைவேற்று, 20,000 ம் ரூபா வாழ்க்கை செலவுக்கு போதுமா? போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பாதாதைகளை ஏந்தியவாறு, கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், பட்டதாரிகளிற்கு ஒரு வருட பயிற்சிக்காலம் நிறைவடைந்தும் அரசாங்கம் சரியான நியமனத்தை வழங்கவில்லை. செப்டம்பர் 03ம் திகதி ஒரு வருட பயிற்சிக்காலம் முடிவடைந்த பின்பும் எமக்கான நியமனம் வழங்கப்படாமல் இருப்பது என்பது வேதனைக்குரிய விடயமாகும்.
அது மாத்திரமின்றி எங்களது பட்டதாரி பயிலுனர்கள் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் சமுர்த்தி போன்றவற்றிற்கு வாரத்தில் 07 நாட்களும் எதுவித மேலதிக கொடுப்பனவுகள் இன்றி அழைக்கப்படுகின்றனர்.இது ஒரு பாரிய குறைபாடாக இருக்கின்றது.
தற்போதைய நாட்டின் பொருளாதார நிலைமையில் 20,000 ரூபாயை கொண்டு எவ்வாறு ஒரு குடும்பத்தை கொண்டு நடாத்த முடியும். இந்நிலையில் தற்போதைய வேடிக்கையான அரசாங்கம் எங்களின் பயிற்சிக்காலத்தை 20,000 ரூபா கொடுப்பனவுடன் மேலும் 06 மாதம் நீடித்திருப்பதானது எங்களது வாழ்க்கையில் மேலும் கஸ்டத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கின்றது. பல்வேறு போராடங்களின் ஊடாக கிடைக்கப்பெற்ற இந்த நியமனத்தை ஒரு வரப்பிரசாதமாக நினைத்துக்கொண்டு இருந்தோம். ஆனால் இந்த அரசாங்கம் எங்களை கஸ்டத்துக்குள்ளாக்கி போராட்டங்களை தொடருவதற்கு தள்ளியுள்ளது.
எனவே இந்த அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிக்கு ஏற்ப செப்டம்பர் 03 என்ற திகதியின் படி எங்களிற்கான பயிற்சி நியமனத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment