ஒருமுறை சூரியன் வடதிசை நோக்கிச் நகர ஆரம்பிக்கும் தை மாதம் முதல் ஆனி மாதம் வரையுள்ள ஆறு மாத காலம் ”உத்தராயணம்” என்றும்; சூரியன் தென் திசை நோக்கி சஞ்சரிக்க ஆரம்பிக்கும் ஆடி முதல் மார்கழி வரையுள்ள ஆறு மாத காலம் ”தட்சணாயணம்” என்றும் அழைக்கின்றார்கள்.
தேவர்களுக்கு ஒரு நாள் என்பது பூமியில் வாழும் எமக்கு ஒரு வருடமாகும். விளக்கமாக கூறுவதாயின் எமது ஒருமாத காலம் தேவர்களுக்கு இரண்டு மணித்தியாலங்களாகும். (தேவர்களுக்கு 24 மணித்தியாலயங்கள் மானிடர்க்கு ஒரு வருடமாகும். என்பதனால்)
உத்தராயண காலம் தேவர்களுக்கு ஒரு நாளின் பகல் பொழுதாகவும்; தட்சணாயண காலம் இராப்பொழுதாகவும் கணிக்கப் பெறுகின்றது. உத்தராயண காலம் சூடான காலமாகவும் தட்சணாயண காலம் குளிரான காலமாகவும் இருப்பதனால் உத்தராயண கால ஆரம்ப தினமான தை முதலாம் நாள் தைப்பொங்கல் பொங்கி சூரியனுக்கு விருந்து படைக்கின்றோம்.
அடுத்து வரும் தட்சணாயண காலம் தேவர்களுக்கு இராப்பொழுது ஆரம்பமாகின்றது. அது ஆடி முதலாம் நாள் அவர்களுக்கு மாலைநேரமாக அமைவதால் அவர்களுடன் நாமும் ஆடிக்கூழ், கொழுக்கட்டை என்னும் உண்டிவகைகளை விசேடமாகச் செய்து குடும்ப விருந்தாக உண்டு மகிழ்கின்றோம். அத்துடன் விசேட வழிபாடு செய்தலும், உற்றார், உறவினர்களுக்கும், மற்றைய சமூகத்தைச் சேர்ந்தவர்க்கும் இவ்வுண்டி வகைகளை வழங்கி நல்லுறவைப் பேணலும் இப் பண்டிகையின் முக்கிய நிகழ்வாகும்.
தமிழ் இந்துக்கள்; ஆடி மாதம் முதல் நாள் புதுமணத் தம்பதிகளுக்கு ”ஆடிச் சீர்” செய்து; பெண்ணின் தாய் வீட்டிற்கு அழைத்து வருவார்கள். அங்கு விருந்து வைத்து, மாப்பிள்ளைக்கு ”ஆடிப் பால்” என்ற தேங்காய்ப் பாலை வெள்ளி டம்ளரில் கொடுத்து மாப்பிளையை மட்டும் மாப்பிள்ளையின் வீட்டிற்கு அனுப்பி விட்டு, பெண்ணைத் தாய் வீட்டிலேயே ஆடி மாதம் முழுதும் தங்க வைத்துக் கொள்வார்கள்.
அதற்கு சில காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றது. ஆடியில் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும். தாய்க்கும் குழந்தைக்கும் வெயில் காலம் கஷ்டத்தைத் தரும் என்பதானாலும், சித்திரை மாதத்தில் ஆண்குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு ஆகாது என்றும் (சித்திரையில் புத்திரன் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தால் குடும்பம் நாசம் என) ஒரு ஐதீகம் இருப்பதால் அவ்வாறான வழக்கத்தை மேற்கொண்டு வருவதாக அறிகின்றோம்.
ஆடி வரை கருத்தரிக்காத புதுமணப் பெண்ணுக்குத்தான் இந்த கட்டுப்பாடு நிலவுகின்றது. இதனால் "ஆடிப் பால் சாப்பிடாத மாப்பிள்ளையைத் தேடிப் பிடி” என்பார்கள்.
ஆடிப்பிறப்பின் சிறப்பினை கூற வந்த ஈழத்தின் சிறப்புக்குரிய கவிஞர் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்கள் முற்காலத்தில் ஆடிப்பிறப்பு எப்படிக் கொண்டாடப் பெற்றது என்பதனையும், ஆடிப்பிறப்பிற்கு முதல் நாள் சிறுவர்கள் கொள்ளும் உற்சாகத்தினையும், சந்தோசத்தையும் தம்மையும் ஒரு சிறுவனாக பாவனை செய்து பாடிய பாடல் பிரபல்யமானது.
ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற்
பச்சையரிசி இடித்துத் தெள்ளி
வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து
வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து
தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச்
சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு
வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி
வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப்
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே
பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டுமா வுருண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக்கவா யூறிடுமே
குங்குமப் பொட்டிட்டுப் பூமாலை சூடியே
குத்துவிளக்குக் கொழுத்தி வைத்து
அங்கிள நீர்பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் படைப்பும் படைப்போமே
வன்னப் பலாவிலை ஓடிப் பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டே
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளிவார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே
வாழைப் பழத்தை உரித்துத் தின்போம்நல்ல
மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச்சுட ஊதிக் குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே
ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!
கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
No comments:
Post a Comment