2020/06/06

சினிமா விமர்சனம் - பொன்மகள் வந்தாள் (Ponmagal Vandhal)



ஜோதிகா வழக்கறிஞர் வெண்பாவாக நடித்த பொன்மகள் வந்தாள் படம் பல எதிர்ப்புகளை தாண்டி அமேசான் பிரைமில் (amazon prime) வெளியாகியுள்ளது.

கவலையே இல்லாமல் ஓடியாடி விளையாடும் பெண் குழந்தைகளை கடத்தி, கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யும் பணக்கார வீட்டுப் பையன், அவனது நண்பன். பிஞ்சுக் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் காமுகன் தன் மகன் என்பது தெரிந்தும் பெரும்புள்ளியான வரதராஜன்( தியாகராஜன்) அதை தட்டிக் கேட்கவில்லை. அப்பாவின் அதிகாரம், பண பலம் இருக்கும் தைரியத்தில் பிஞ்சுக் குழந்தைகளை சிதைத்துக் கொண்டிருந்த காமுகன் ஒரு நாள் ஜோதியின் மகளை கடத்தி, சீரழித்துவிடுகிறான். அந்த வலியை தாங்க முடியாமல் அந்த குழந்தை கதறுகிறது. குழந்தையை தேடி வரும் ஜோதி அதை காப்பாற்றி வீட்டுக்கு கொண்டு செல்கிறாள். அதை தடுக்கும் வரதராஜனின் மகன் மற்றும் அவனின் நண்பனை சுட்டுக் கொல்கிறார்.



ஜோதியை போலீசார் வடநாட்டு சைக்கோ என்று முத்திரை குத்தி அவர் தான் பல பெண் குழந்தைகளை கடத்தி கொலை செய்தார் என்று கூறி சுட்டுக் கொன்றுவிடுகிறார்கள். இந்த சம்பவம் நடந்து 15 ஆண்டுகள் கழித்து வெண்பா(ஜோதிகா) ஜோதியின் வழக்கை மறுவிசாரணை செய்கிறார்.
அந்த விசாரணையின்போது நான் தான் ஜோதியின் மகள் வெண்பா என்கிறார் ஜோதிகா. அதன் பிறகு என்ன நடந்தது, ஜோதிக்கு நீதி கிடைத்ததா, வரதராஜன் தண்டிக்கப்பட்டாரா, உண்மையில் வெண்பா யார் என்பது தான் கதை.

படத்தில் ஜோதிகா வெண்பாவாக நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார். அவரின் பெரிய விழிகளில் இருந்து வரும் கண்ணீர் ரசிகர்களை ஏதோ செய்கிறது. தான் சிறுமியாக இருந்தபோது பலாத்காரம் செய்யப்பட்டதாக வெண்பா நீதிமன்றத்தில் கூற அதை கேட்டு அங்கிருந்தவர்களுக்கு மட்டும் அல்ல நமக்கும் கண்ணீர் தானாக வருகிறது. மிகவும் சென்சிடிவான விஷயத்தை கையில் எடுத்து அதை அழகாக படமாக்கியிருக்கிறார் ப்ரட்ரிக். ஆனால் திரைக்கதையில் தொய்வு இருப்பது தான் பெரிய மைனஸ். அடுத்து என்ன நடக்கும் என்பதை பல இடங்களில் எளிதாக யூகிக்க முடிகிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து ஊட்டிக்கு வந்து ஜோதி வழக்கில் ஆஜராகும் ராஜரத்தினம்(பார்த்திபன்) அடுத்து என்ன செய்வார் என்பதை நம்மால் முன்கூட்டியே சொல்ல முடிகிறது. இது தான் படத்தின் பலவீனம். அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாமல் பார்க்க வேண்டிய படத்தை நம்மையே கதை சொல்ல வைத்தது மைனஸ். கதையின் அழுத்தம், ஜோதிகாவின் நடிப்பு, கோவிந்த் வசந்தாவின் இசை படத்திற்கு பக்கபலம். அமைதியாக இருந்து நம்மை எல்லாம் அவரை பற்றி பேச வைத்திருக்கிறார் ஜோதிகா.


பிரதாப் போத்தன், பாக்யராஜ், பார்த்திபன், தியாகராஜன், பாண்டியராஜன் ஆகியோர் தங்கள் நடிப்பால் அசத்தியுள்ளனர். இயக்குநர்களாகிய அவர்களுக்கு நடிக்கவா சொல்லித் தர வேண்டும். படத்திற்கு பெரிய பலம் கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை. கலைகிறதே கனவே பாடலை கேட்கும் போது மனதிற்குள் ஏதோ செய்கிறது.

பொன்மகள் வந்தாள் படத்தை பார்க்கும்போது தமிழகத்தில் அநியாயமாக பறிபோன பிஞ்சுகளின் முகங்கள் கண் முன்பே வந்து போகிறது. பணம் இருந்தால் எதையும் செய்துவிட்டு, தப்பிக்கலாம் என்று மனசாட்சியே இல்லாமல் இருப்பவர்களை எதிர்த்து போராடியிருக்கிறாள் இந்த பொன்மகள். எதற்காகவும் பயப்படாதே என்று ஜோதி தன் மகளிடம் சொல்வது போன்று அனைத்து அம்மாக்களும் தங்களின் பெண் குழந்தைகளிடம் சொல்ல வேண்டும்.

ஜோதிகாவின் கதை தேர்வுக்கு ஒரு சல்யூட். அவருக்கு துணையாக இருந்து படத்தை தயாரித்த சூர்யாவை பாராட்டியே ஆக வேண்டும். ஆக, பொன்மகள் வந்தாள், பெற்றோர் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.

No comments:

Post a Comment