2021/09/28

நள்ளிரவில் இருந்து அமுலுக்கு வந்துள்ள நடைமுறை...


நள்ளிரவு 12.00 மணி முதல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள் நடைமுறைக்கு வந்துள்ளது.

சுகாதார அமைச்சு இதனை  தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு வரும் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள், விமானத்தில் ஏறும் முன் மேற்கொண்ட கோவிட்-19 தொற்று தொடர்பான பி.சி.ஆர். முடிவுகளுக்கமைய, மீண்டும் இலங்கையில் பி.சி.ஆர். சோதனை மேற்கொள்ளாது விமான நிலையத்திலிருந்து வீடு திரும்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக, கோவிட்-19 தடுப்பூசிகளின் இரண்டு அளவுகளையும் முழுமையாக பெற்ற பயணிகள் இலங்கைக வருவதற்கு முன்னர் 72 மணிநேரங்களுக்குள் மேற்கொள்ளும் பி.சி.ஆர். சோதனைகளில் கொவிட் தொற்றுக்கு எதிர் முடிவினை கொண்டிருக்க வேண்டும். சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் நேற்று  சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில், இது தொடர்பான தொழில்நுட்பக் குழுவால் எடுக்கப்பட்ட முடிவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முழுமையாக தடுப்பூசி போடாத வெளிநாட்டவர்கள் தாங்கள் தனிமைப்படுத்தப்படும் ஹோட்டலுக்கு, தனிமைப்படுத்தல் உயிர்க் குமிழி பாதுகாப்பின் அடிப்படையில், செல்வதற்கு அனுமதி அளிக்கப்படவுள்ளது.

அங்கு வைத்து அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார். எனினும், இலங்கையர்களுக்கு விமான நிலையத்தில் அல்லது அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலில் பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டு, அதில் அவர்களுக்கு தொற்று ஏற்படாவிட்டால், அவர்களை வீட்டிற்கு அனுப்ப வாய்ப்பு உள்ளதாகவும், அவர்களுக்கு 12 ஆவது நாளில் மீண்டும் மேற்கொள்ளும் பி.சி.ஆர். சோதனையில் அவர்களுக்கு கோவிட் தொற்று ஏற்படாவிட்டால், அவர்களை சமூகத்துடன் இணைக்க வாய்ப்பு இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

வீட்டு தனிமைப்படுத்தல் வசதிகள் இல்லாதவர்கள், அரசாங்க தனிமைப்படுத்தல் மையங்களில் அல்லது அவர்கள் விரும்பும் ஹோட்டலில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைக்கப்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது நாட்டிற்கு வரும் பயணிகள் 72 மணி நேரத்திற்கு முன் கட்டாயம் பி.சி.ஆர். சோதனை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன், அவர்களது சோதனை முடிவுகளின் அடிப்படையில், அவர்கள் தொற்றாளர்களாக இல்லையெனின் மாத்திரம் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். 


 

No comments:

Post a Comment