2021/09/28

வவுனியாவில் 20 - 30 வயதிற்கு உட்பட்டவர்கள் தடுப்பூசி பெறுவதில் ஆர்வமின்மை!



வவுனியாவில் 20 - 30 வயதிற்கு இடைப்பட்ட இளைஞர், யுவதிகள் சினோபாம் தடுப்பூசி பெறுவதில் ஆர்வமற்ற தன்மை காணப்படுவதாகச் சுகாதாரப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

நாடு பூராகவும் கோவிட் தொற்றினைக் கட்டுப்படுத்தும் 20 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் அரசாங்கம் தடுப்பூசிகளை விரைவுபடுத்தி தற்போது வழங்கி வருகின்றது. அதன் அடிப்படையில் வவுனியா மாவட்டத்திலும் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி வழங்கும் நிலையங்கள் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.

அதிலும் குறிப்பாக 20 - 30 வயதிற்குட்பட்ட இளைஞர், யுவதிகள் பலர் தடுப்பூசி பெறுவதில் ஆர்வம் காட்டாத தன்மை காணப்படுவதுடன், சினோபாம் தடுப்பூசி அல்லாது வேறு தடுப்பூசி வருமா என வினவுவதையும் அவதானிக்க முடிகின்றது.

20, 21 வயது இளைஞர், யுவதிகள் தடுப்பூசிகளைப் பெற வருகின்ற போதும் 22- 29 வயதிற்குட்பட்டோர் தடுப்பூசி நிலையங்களுக்கு வந்து தடுப்பூசியைப் பெறுவது மிகவும் குறைவாகக் காணப்படுகின்றது. எனவே, காலத்தைக் கடத்தாது கிடைக்கும் தடுப்பூசியைப் பெற்று தாமும், தமது சமூகமும் கோவிட் தொற்றிலிருந்து விடுபட இளைஞர்கள், யுவதிகள் முன்வர வேண்டும்.

வவுனியா மாவட்டத்தில் இடம்பெற்ற இறப்புக்களில் தடுப்பூசி பெறாதவர்களே அதிகமான மரணித்துள்ளார்கள். இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்ற எவரும் இதுவரை மரணிக்கவில்லை.

இதனால் தேவையற்ற வதந்திகள், குழப்பங்களைத் தவிர்த்து தடுப்பூசிகளைப் பெறுவதற்கு உங்களுக்குரிய நிலையங்களுக்கு 20 -30 வயதிற்குட்பட்ட இளைஞர், யுவதிகள் முன்வர வேண்டும் எனச் சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.   



 

No comments:

Post a Comment