2019/10/31

சினிமா விமர்சனம் - பிகில் (BIGIL)



ராயபுரத்தை தனது பிடியில் வைத்திருக்கிறார் ராயப்பன்(அப்பா விஜய்). அவருக்கு தன் மகன் மைக்கேல் தன்னை போன்று ரவுடி ஆகாமல் விளைாட்டு துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்று ஆசை.

மைக்கேலும் அப்பாவின் ஆசைப்படி கால்பந்தாட்டத்தில் ஈடுபட்டு இந்திய அணிக்கு தேர்வாகிறார். டெல்லிக்கு கிளம்பும் நேரத்தில் மைக்கேலின் வாழ்க்கையில் பெரும் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் அவரின் வாழ்க்கை தடம் மாறி அப்பா ராயப்பன் எது நடக்கக் கூடாது என்று நினைத்தாரோ அது நடந்து விடுகிறது.விஜய்யின் வாழ்க்கை வேறு மாதிரியாக மாறியதால் அவரால் கால்பந்தாட்டத்தில் ஈடுபட முடியாமல் போகிறது. இந்நிலையில் விஜய்யின் நண்பரான கதிர் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளாராக உள்ளார். அவரை வில்லன் டேனியல் பாலாஜி கத்தியால் குத்த மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

அந்த நேரத்தில் கதிர் செய்த காரியத்தால் மைக்கேல் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படுகிறார். ஒரு ரவுடியை எப்படி பயிற்சியாளராக்க முடியும் என்ற கேள்வி எழும்போது மைக்கேல் பிகிலாக இருந்த பிளாஷ்பேக்கை காட்டுகிறார்கள்.




பல்வேறு பிரச்சனைகளுக்கு நடுவே விஜய் எப்படி அந்த பெண்கள் அணியை ஒரு வழிக்கு கொண்டு வந்து வெற்றி பெறச் செய்கிறார் என்பதை காட்டியுள்ளார் அட்லி.

ராயப்பனாகவும் சரி, பிகிலாகவும் சரி, பயிற்சியாளர் மைக்கேலாகவும் சரி விஜய் தனது கதாபாத்திரத்தை புரிந்து நடித்துள்ளார். முதல் பாதி நீளமாக உள்ளது. படம் மெதுவாக செல்வது தியேட்டரில் உள்ளவர்களை லைட்டா எரிச்சல் அடைய வைக்கிறது.முதல் பாதியில் அட்லி சற்று தடுமாறியுள்ளார். ஆனால் அதை இரண்டாம் பாதியில் சரி செய்துவிட்டார். விஜய் ரசிகர்களுக்காக பார்த்து, பார்த்து சில காட்சிகளை வைத்துள்ளார் அட்லி. நயன்தாராவுக்கு விஜய்யை காதலிப்பதை தவிர பெரிதாக வேலை இல்லை. இருப்பினும் நயன், விஜய் சேர்ந்து வரும் காட்சிகள் அருமை.

ராயப்பன் கதாபாத்திரம் வெயிட்டாக இருந்தாலும் சில மேனரிஸம் திணிக்கப்பட்டு போன்று உள்ளது. இரண்டாம் பாதி போவதே தெரியவில்லை. பெண்கள் கால்பந்தாட்ட அணியை சேர்ந்த இந்துஜா, ரெபா, அம்ரிதா, இந்துஜா, வர்ஷா ஆகியோர் தங்களின் கதாபாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஆனால் அவர்களின் கதாபாத்திரம் மேலோட்டமாக உள்ளது.

பெண்கள் முன்னேற்றம் பற்றிய படம் என்பதை காட்ட முயன்று வெற்றியும் கண்டுள்ளனர். விஜய் அரசியலுக்கு வருவார் என்று நம்பும் அவரின் ரசிகர்களுக்காக அட்லி சில பன்ச் வசனங்கள் வைத்திருக்கிறார்.

No comments:

Post a Comment