2021/10/01

ஜேர்மனியை தாக்கிய சூறாவளி! சுழலில் சிக்கி கடலில் மூழ்கிய மக்கள்...

 


ஜேர்மனியில் திடீரென சூறாவளி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் வடக்கில் உள்ள கீல் நகரையே சூறாவளி தாக்கியுள்ளது.

கீல் நகரில் உள்ள உலாப்படகு களியாட்ட விடுதியைச் சூறாவளி தாக்கியது போது, அங்கிருந்த மக்கள் பலர் சுழலில் சிக்கி கடலில் விழுந்து மூழ்கியுள்ளனர்.

எனினும், அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர், இதில் 3 பேருக்குச் சிறியளவு காயமும், 3 பேருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த 6 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


ஈகுவடாரில் சிறைக்குள் கலவரம்! - 116 பேர் பலி


ஈகுவடார் நாட்டில் சிறையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளதென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த மோதலில் ஐந்து கைதிகளின் தலை துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஈகுவடார் நாட்டில் குவாகுயில் நகர சிறையில் கடந்த 28ம் திகதி இரு குழுக்களுக்கு இடையே மோதல் வெடித்தது.

இரு தரப்பினர்களும் துப்பாக்கியால் சுட்டும், கைக்குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். ஆரம்பத்தில் 24 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட போதிலும், தற்போது பலி எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈகுவடாரில் செயல்பட்டு வருகிற மெக்சிகோவை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் கட்டளையின்பேரில்தான் இந்த மோதல் வெடித்ததாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

இந்நிலையில், அந்நாட்டு ஜனாதிபதி கில்லர்மோ லாசோ, சிறைகள் அமைப்பில் அவசரகால நிலையை பிறப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மோதல் சம்பவம் குறித்து அந்நாட்டு சிறைத்துறை இயக்குனர் பொலிவர் கார்சான் கருத்து வெளியிடுகையில், இந்த மோதல் மிக பயங்கரமானது. கையெறி குண்டு வீச்சு, துப்பாக்கிச்சூடு, குண்டு வெடிப்புகள் நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் 80 கைதிகள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வந்தள்ளது.


 

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் சர்வதேச சிறுவர் தினத்தில் போராட்டம் முன்னெடுப்பு...

 


சர்வதேச சிறுவர் தினமான இன்று முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

1669ஆவது நாளாக தொடர் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வரும் முல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அலுவலகம் முன்பாக இன்று காலை 10 மணிக்கு இந்த போராட்டம் நடத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இறுதிபோரின் போது இராணுவத்திடம் சரணடைந்த நிலையில் குடும்பங்களுடன் காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு என்ன நடந்தது?, இராணுவத்தால் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளுக்கு என்ன நடந்தது? உள்ளிட்ட கோஷங்களுடன் இந்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 இதன்போது அண்மையில் ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள் சபையில், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், அதற்கெதிராக கோஷங்களும் எழுப்பப்பட்டுள்ளன.

கொட்டும் மழைக்கு மத்தியில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், 10இற்கும் மேற்பட்ட புலனாய்வாளர்கள் போராட்டத்தை புகைப்படம் எடுக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். 


கிழக்கு மாகாணத்தில் பாடசாலையை ஆரம்பிப்பதற்கான விசேட கலந்துரையாடல்....

 


முதற்கட்டமாக 200 மாணவர்களுக்கு உட்பட்ட பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான விசேட கலந்துரையாடல்  நேற்று  கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித்த பீ வணிகசிங்கவின் தலைமையில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் நடைபெற்றது. 

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஆர்.எம். தௌபீக் அவர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ அனுராதா யஹம்பத் அவர்களிடம் விடுத்த விசேட வேண்டுகோளுக்கிணங்க ஆளுநரின் விசேட பணிப்புரைக்கு அமைய கிழக்கு மாகாண சுகாதாரத் துறை அதிகாரிகளும், கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோரின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் இக் கலந்துரையாடல் நடைபெற்றது. கிழக்கு மாகாண நான்கு பிராந்திய சுகாதார பணிப்பாளர்களும் மாகாண போக்குவரத்துப் பணிப்பாளர்களும் யூனிசெஃப் பிரதிநிதிகளும் இக் கலந்துரையாடலில் கலந்து கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்திருந்தார்.

மேலும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்கள் மாவட்ட செயலாளர்கள் zoom இணைய வழியூடாக இக்கலந்துரையாடலில் இணைந்து கொண்டனர்.

இவ் விசேட கூட்டத்தில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஆர்.எம். தௌபீக் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், கிழக்கு மாகாணத்தில் கோவிட் - 19 கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவு குறைந்து காணப்பட்டாலும் நாட்டில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டு நாடு படிப்படியாக சாதாரண நிலைக்கு வரும் போது இதை மேலும் அதிகரிப்பதை கட்டுப்படுத்துவதே எமது மக்களின் செயல்பாட்டிலேயே தங்கியுள்ளது.

கோவிட் 19 கொரோனா வைரஸின் புதிய பிறழ்வுகள் ஏற்பட்டால் மேலும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க இடமுண்டு எனினும் கிழக்கு மாகாணத்தில் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு மிகவும் வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றது.


 
20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது. 20 வயதுக்கு மேற்பட்ட சனத் தொகையின் அடிப்படையில் 90 வீதமானவர்கள் முதல்கட்டமாக தடுப்பூசியும் 80 வீதமானவர்கள் இரண்டாவது தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 95 வீதத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. 

 இதனால் பெரும்பாலும் நோயின் தாக்கம் வெகுவாக குறைய அதிக வாய்ப்பு உண்டு.  இருப்பினும் நாடு சாதாரண அன்றாட வாழ்க்கைக்கு திரும்பினாலும் மக்கள் பூரண பாதுகாப்பைப் எடுத்துக்கொள்வது சம்பந்தமாக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சகல வழிகாட்டல்களையும் பூரணமாக பின்பற்றுதல் மக்களின் கடமையாகும்.   


 
மாணவர்கள் ஆசிரியர்கள் மத்தியில்  தொற்று பரவல் அடைவதில் அவதானம் செலுத்த பின்வரும் விடயங்களை பாடசாலைகளில் கடைப்பிடிக்குமாறு கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஆர்.எம். தௌபீக் கேட்டுக்கொண்டார். 






வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சமந்தா!!!

 


சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய நடிகை சமந்தா பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து, கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு இருவரும் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வந்தார்கள்.

இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக நடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் பிரியப் போவதாக வெகுநாட்களாகவே செய்திகள் உலவுகிறது. இதுதவிர தற்போது ஐதராபாத்தில் வசித்து வரும் நடிகை சமந்தா, விரைவில் மும்பைக்கு குடியேர உள்ளதாகவும் ஒரு தகவல் பரவி வந்தது. இந்நிலையில், சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய நடிகை சமந்தா பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். 

அப்போது ரசிகர் ஒருவர், ‘நீங்கள் நிஜமாகவே மும்பைக்கு மாற இருக்குறீர்களா’ எனக் கேட்டார். இதற்கு “எப்படி இந்த வதந்தி பரவியது எனத் தெரியவில்லை. மற்ற நூறு வதந்திகளைப் போல இதுவும் உண்மையில்லை. எப்போதுமே எனக்கு ஐதராபாத் தான் வீடு. எனக்கு ஒவ்வொன்றையும் வழங்கியது ஐதராபாத் தான், நான் இங்கு தான் வசிப்பேன்” என பதிலளித்தார் சமந்தா. இந்த கலந்துரையாடலின் போது, நடிகை சமந்தா, விவாகரத்து விவகாரம் குறித்த எந்த கேள்விக்கும் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மூன்றாவது தடுப்பூசியையும் பெற்றுக்கொண்ட ஜோ பைடன்....


அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், கொவிட் தடுப்பூசியின் பூஸ்டர் என்றழைக்கப்படும் மூன்றாவது சொட்டு மருந்தையும் பெற்றுக்கொண்டார்.

65 வயதுக்கு மேற்பட்ட நோய் அறிகுறிகளை கொண்ட நபர்களுக்கு மூன்றாவது மருந்தளவாக பைசர் தடுப்பூசியை செலுத்த அமெரிக்க சுகாதார அதிகாரிகள் கடந்த வாரம் முன்னர் அங்கீகாரம் வழங்கியிருந்தனர்.

கொவிட் வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்கு, தடுப்பூசி செலுத்திக்கொள்வதே ஒரே வழி என்று பூஸ்டர் சொட்டைப் பெற்றுக்கொண்ட பின்னர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 78 வயதாகும் ஜோ பைடன், கடந்த டிசம்பர் மாதம் 21ம் திகதி தனது கொவிட் முதலாவது மருந்தளவையும், ஜனவரி 11ம் திகதி இரண்டாவது மருந்தளவையும் பெற்றுக்கொண்டார்.

மக்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஜோ பைடன் பூஸ்டர் மருந்தைப் பெற்றுக்கொள்ளும் வீடியோவையும் வெளியிடப்பட்டுள்ளது




 

கொரோனாவால் உயிரிழந்த மனைவிக்கு கோவில் கட்டி வழிபடும் கணவர்...

 


ஷாஜபூரில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள சம்ப்கேடா கிராமத்தை சேர்ந்த நாராயண் சிங் ரத்தோர் என்பவர் கொரோனாவால் உயிரிழந்த காதல் மனைவிக்கு கோவில் கட்டி வழிபாடு செய்து வருகிறார்.

இந்தியாவில் ஆண்கள் தங்கள் மனைவியின் நினைவாக கட்டிய பல நினைவு சின்னங்கள் உள்ளன. அதில் ஆக்ராவில் உள்ள தாஜ்மகால் அவற்றில் மிகவும் புகழ்பெற்றது. அத்தகைய ஆண்களின் பட்டியலில் மத்தியபிரதேசத்தின் ஷாஜபூர் மாவட்டத்தை சேர்ந்தவரும் இணைந்து உள்ளார்.

ஷாஜபூரில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள சம்ப்கேடா கிராமத்தை சேர்ந்தவர் நாராயண் சிங் ரத்தோர். இவரது மனைவி கீதாபாய். இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

கொரோனா 2-வது அலையில் அவரது மனைவி கீதாபாய் இறந்து விட்டார். அவரது நினைவாக இருந்த நாராயண் சிங் ரத்தோர், மனைவிக்கு ஒரு கோவிலை கட்ட முடிவு செய்தார். அதன்படி காதல் மனைவிக்கு அவரது சொந்த இடத்தில் கோவிலை கட்டினார்.

மேலும் அதில் தனது மனைவியின் சிலையை நிறுவினார். அதனை தினந்தோறும் வழிபாடு செய்து வருகிறார். கோவிலில் கீதாபாய் சிலையை அமைப்பதற்கு முன்பு குடும்ப உறுப்பினர்கள் அனைத்து சடங்குகளையும் செய்தனர். இப்போது, அவர்கள் தினமும் சிலையை வணங்குகிறார்கள்.

ரத்தோரின் மூத்த மகன் லக்கி இதுகுறித்து கூறுகையில், “இந்த கோவில் என் தாய் எங்களை சுற்றி இருக்கிறார் என்ற உணர்வை தருகிறது” என்றார்.


அடுத்த வாரம் நாடாளுமன்றில் என்ன நடக்கும்?


2022 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

அத்துடன், பாராளுமன்றத்தை எதிர்வரும் ஒக்டோபர் 04ஆம் திகதி முதல் 08ஆம் திகதி வரை ஐந்து நாட்கள் கூட்டுவதற்கும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒக்டோபர் 04ஆம் திகதி திங்கட்கிழமை முழு நாளும் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கான விசேட பாராளுமன்ற அமர்வு தினமாக ஒதுக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் இதுவரை பாராளுமன்றத்தில் கேட்கப்படாத வாய்மூல விடைக்களுக்கான 40 கேள்விகளுக்காக முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 4.30 வரையான நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக செயலாளர் நாயகம்
தெரிவித்தார்.

ஒக்டோபர் 05ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் முற்பகல் 10.00 மணிக்குக் கூடவிருப்பதுடன், முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை பெறுமதிசேர் வரிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், நிதிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் என்பன விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளன.

ஒக்டோபர் 06ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை பெற்றோலிய வளங்கள் சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு) விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளது.

ஒக்டோபர் 07ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை தேருநர்களைப் பதிவுசெய்தல் (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு), ஊழியர் சகாய நிதிய (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு) மற்றும் ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தின் கீழ் கட்டளைகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

ஒக்டோபர் 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை 2021ஆம் ஆண்டு நடுப்பகுதியின் நிதி நிலைமைகள் தொடர்பான அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறும்.

அத்துடன், செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை முற்பகல் 10.00 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை தினமும் பிற்பகல் 4.30 மணி முதல் 4.50 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன்,

செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய தினங்களில் பிற்பகல் 4.50 மணி முதல் 5.30 மணி வரையான நேரம் ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதத்துக்கும், புதன்கிழமை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.


 

மலையக பகுதிகளிலுள்ள நகரங்களின் இயல்பு நிலை வழமைக்கு திரும்பியது.

 


நாட்டில் அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று காலை 4 மணியுடன் தளர்த்தப்பட்ட நிலையில், மலையக பகுதிகளிலுள்ள நகரங்களின் இயல்பு நிலை வழமைக்கு திரும்பியது. கம்பளை, புஸல்லாவை, நுவரெலியா, ஹட்டன், பதுளை உட்பட பெருந்தோட்டங்களை அண்டியுள்ள நகரங்களிலுள்ள அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. 

பெரும்பாலான கடைகளில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டாலும் ஒரு சில இடங்களில் அவை மீறப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுமார் 42 நாட்களுக்கு பிறகு தோட்ட பகுதிகளுக்கான பொது போக்குவரத்து சேவையும் இன்று இடம்பெற்றது.அதேவேளை, பொலிஸார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். சுகாதார அதிகாரிகளும் பரிசோதனை நடவடிக்கையை முன்னெடுத்துவருகின்றனர்.

தொழில் மற்றும் அத்தியாவசிய தேவைகளின் நிமித்தம் மட்டும் நகரப்பகுதிகளுக்கு வாருங்கள், அவ்வாறு வரும்போது முழுமையான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியானது விசேட சுற்றுநிரூபம்....

 


இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டமானது இன்று அதிகாலை நீக்கப்பட்டுள்ள நிலையில் அரச ஊழியர்களை பணிக்கு அழைக்கும் விதம் தொடர்பான விசேட சுற்றுநிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த சுற்றுநிரூபம் பொது நிர்வாக அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கோவிட் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதை அடுத்து, சில பொது சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.இந்நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு இன்று அதிகாலையுடன் நீக்கப்பட்டதையடுத்து அரச சேவைகளை வழமைபோல முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாடு மீளத் திறக்கப்படும் போது அரச அலுவலகங்கள் ஊடாக வழங்கப்படும் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான ஆளணியினரை அடையாளம் கண்டு கடமைக்கு அழைக்க வேண்டும் என்றும், அவ்வாறு ஊழியர்களை சேவைக்கு அழைக்கும் அதிகாரம் நிறுவன பிரதானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ வாகனங்களைக் கொண்டுள்ளவர்கள் மற்றும் நிறுவனத்தால் வழங்கப்படும் போக்குவரத்து வசதிகளைப் பெறும் ஊழியர்களுக்கு இந்த நியதி பொருந்தாது எனவும், அவர்கள் வழமை போல கடமைக்குச் சமூகமளிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கடமைகளுக்கு அழைக்கப்படும் அதிகாரிகளை தவிர்ந்த ஏனைய அனைவரும் ஒன்லைன் முறைமை ஊடாகக் கடமையாற்ற வேண்டும் என்றும், கடமைகளுக்காக அலுவலகத்துக்கு அழைக்கப்படும் ஊழியர்கள் பணியில்லா நாட்களில் ஒன்லைன் முறைமை ஊடாகக் கடமையாற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 
கடமைக்கு அழைக்கப்படும் அதிகாரிகள் மற்றும் ஒன்லைன் முறைமை ஊடாகக் கடமையாற்றும் ஊழியர்களுக்கான வசதிகள் வழங்குதல் மற்றும் அவசியமான சந்தர்ப்பங்களின்போது வேறு இடங்களில் கடமையாற்ற தற்காலிகமாக வாய்ப்பளிக்கும் அதிகாரம் அமைச்சின் செயலாளர் மற்றும் நிறுவன பிரதானிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்களுக்கு ஊழியர்கள் கடமைக்கு அழைக்கப்படும்போது கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், விசேட நோய் நிலைமைகளைக் கொண்டவர்களைக் கடமைக்கு அழைக்க வேண்டாம் எனவும், அவ்வாறானவர்களின் சேவை கட்டாயம் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் அவர்கள் கடமைக்குச் சமூகமளிக்கவும், வீடு செல்லவும் விசேட கால எல்லை மற்றும் வசதிகளை வழங்க நிறுவனத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 


2021/09/30

மத்திய வங்கியின் அதிரடி நடவடிக்கை - சற்று முன்னர் வெளியான விசேட அறிவிப்பு..

 


அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதி செய்யும் போது விதிக்கப்பட்டிருந்த நிதி வைப்பு கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை மத்திய வங்கியினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் (Ajith Nivard Cabraal ) சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆறு மாதங்களுக்கான நிதி கொள்கை குறித்த ஊடக சந்திப்பில் உரையாற்றிய மத்திய வங்கியின் ஆளுநர், இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இந்த கட்டுப்பாடுகளை நீக்குவதன் மூலம் வர்த்தகர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் கடுமையான பொறுப்புடன் செயல்பட வேண்டும் என கூறியுள்ளார்.

இலங்கை பொருளாதாரம் எதிர்கொள்ளும் கடுமையான டொலர் இருப்பு பற்றாக்குறை காரணமாக இரண்டு வாரங்களுக்கு முன்பு, 623 அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு கடுமையான இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

வவுனியா நகரப்பகுதியில் இராணுவத்தால் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு

வவுனியா நகரப் பகுதியின் முக்கிய பல இடங்களில் இராணுவத்தினரால் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா நகரப் பகுதியின் முக்கிய பல இடங்களில் இராணுவத்தினரால் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா நகரப் பகுதியின் பேருந்து தரிப்பிடம், அரச மற்றும் தனியார் வங்கிகள், சந்தைகள், மக்கள் கூடும் இடங்கள், முச்சக்கரவண்டி தரிப்பிடங்கள் போன்ற பொது இடங்களில் தொற்று நீக்கம் செய்யப்பட்டது.

பொதுச் சுகாதார பரிசோதகர்கள், நகர சபை பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் நகரசபை தீயணைப்பு வாகனத்தின் உதவியுடன் தண்ணீர் விசிறி குறித்த பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.