ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் ஒன்பது நாட்கள் அன்னை பராசக்தியை வீடுகளிலும், ஆலயங்களிலும் பூஜை செய்து வழிபடும் நவராத்திரி விழா இவ்வாண்டு புரட்டாசி மாதம் 12-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை (29/09/2019) ஆரம்பமாகின்றது.
எல்லாவற்றுக்கும் சக்தி தான் ஆதாரம் . அந்த சக்தியை வழிபடுவதே நவராத்திரி திருவிழா. அம்மனை வழிபட்டால் அனைத்து ஆற்றலையும் பெறலாம்.சக்தி இல்லை என்றால் இந்த உலகம் இயங்காது. அந்த சக்தியை வழிபடுவதற்காக உருவானதுதான் நவராத்திரி பண்டிகை. நாம் பேச இயங்க, செயல்பட சக்தி வேண்டும். சிவன் அதை உணர்ந்துதான் சக்தியை தன்னுடன் இணைத்துக்கொண்டார்.
நவராத்திரி நாட்களில் வீட்டை அலங்கரித்து, கொலு அமைத்து வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களையும், கன்னிப் பெண்களையும் அழைத்து அவர்களுக்கு தாம்பூலம் கொடுத்து, நிகழ்ச்சிக்கு வந்த விருந்தினர்களை மரியாதை செய்து அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி இதனால் அந்த இல்லத்தில் முப்பெரும் தேவிகளின் ஆசியைப் பரிபூரணமாக பெறும் நன்னாள் இது.
முதல் மூன்று நாட்களில் வீரத்தையும், தைரியத்தையும் வேண்டி பராசக்தியை வழிபடுதல் வேண்டும். அடுத்த மூன்று நாட்களும் செல்வத்தை வேண்டி மஹாலஷ்மியை வழிபடவேண்டும். இறுதி மூன்று நாட்களும் கல்வி, அறிவு, சகல கலை ஞானங்கள் என்பவற்றை வேண்டிச் சரஸ்வதி தேவியை வழிபட வேண்டும். பத்தாவது நாள் விஜயம் என்றாலே வெற்றி! தீயவை அழிந்து நன்மை பெருகும். நாம் தொடங்கும் காரியம் வெற்றி பெறும் என்பதற்காகவே விஜயதசமி கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின்போது துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற இம்மூவரையும் பூஜிப்பவர்களுக்கு எதிலும் நலம்பெறும் வகையில் வெற்றி கிடைக்கும்.
காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்பது போல், எல்லா விஷயத்திற்கும் ஒரு காரணத்தை நம் முன்னோர்கள் வைத்திருப்பார்கள். கொலு படிகளுக்கும் அர்த்தத்தோடு காரணம் இருக்கிறது. புழுவாய் பிறந்து, மரமாகவும் பிறந்து, மனிதராகவும் பிறந்து, கடைசியில் இறைவனை அடைகிறோம் என்ற அர்த்தத்தில்தான் நவராத்திரி அன்று ஒன்பது படிகளில் பொம்மைகளை வைக்கிறோம்.
முதல் படி, அதாவது கீழ் படியில் – ஓரறிவு உயிர் இனமான புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் வைக்க வேண்டும்.
இரண்டாம் படியில் – இரண்டறிவான நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் வைக்க வேண்டும்.
மூன்றாம் படியில் – மூவறிவான கரையான், எறும்பு போன்ற பொம்மைகள் வைக்க வேண்டும்.
நான்காவது படியில் – நான்கு அறிவான நண்டு, வண்டு பொம்மைகள் வைக்க வேண்டும்.
ஐந்தாம் படியில் – ஐந்தறிவு கொண்டநான்குகால் விலங்குகள், பறவைகள், போன்ற பொம்மைகள் வைக்க வேண்டும்.
ஆறம் படியில் – ஆறறிவான மனிதர்களின் பொம்மைகள் வைக்க வேண்டும்.
ஏழாம் படியில் – சாதாரண மனிதர்களுக்கு மேலான மகரிஷிகளின் பொம்மைகள் வைக்க வேண்டும்.
எட்டாம் படியில் – தேவர்களின் உருவங்கள், நவக்கிரக பகவான்கள், பஞ்சபூத தெய்வங்களின் பொம்மைகள் வைக்கலாம்.
ஒன்பதாம் படியில் – முதலில் விநாயகரை வைத்த பிறகு பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளையும், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய பெண் தெய்வங்களையும் வைக்க வேண்டும். இதில், சரஸ்வதி-லஷ்மிக்கும் நடுவில் அன்னை சக்திதேவி இருக்க வேண்டும்.
பொதுவாக கொலுப் படிகளில் பொம்மைகள் வைக்கும் போது கடைசிப்படியான மேல்படியில் இருந்து வைக்க ஆரம்பிக்க வேண்டும். முதலில் மேலே உள்ள கொலுப்படியில் வைக்க வேண்டியது விநாயகர். விக்னங்கள் தீர்க்கும் விநாயகரை முதலில் கொலுப்படியில் வைத்த பிறகுதான் மற்ற பொம்மைகளை வைக்க வேண்டும் என்று பராசக்தி தேவி சொல்லி இருப்பதாக “தேவி பாகவதம்” சொல்கிறது. ஒன்பது படிகள் வைக்க முடியாதவர்கள், முப்பெரும் தேவியை குறிப்பதாகும் 3 படிகளும் வைக்கலாம். அல்லது சக்தியின் சக்கரமான 5 படிகளும் வைக்கலாம். சப்தமாதர்களை குறிக்கும் 7 படிகளும் அமைக்கலாம். நவகிரகங்களைக் குறிக்கும் 9 படியும் வைக்கலாம். ஆக, கொலு படிகள் 3,5,7,9 போன்ற எண் வரும்படி அமைக்கலாம்.
No comments:
Post a Comment