தெற்காசியாவின் மிகவும் உயரமானக் கோபுரமாகக் கருதப்படும் கொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் திங்கட்கிழமை(16) மாலை 5 மணியளில் திறக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு தாமரைக் கோபுரமானது வானொலிகள் மற்றும் தொலைக்காட்சிகளின் அலைவரிசை ஒலிபரப்பினை எண்மான அடிப்படையில் ஒரே இடத்திலிருந்து மேற்கொள்ள வசதி ஏற்பட்டுள்ளதுடன் 356 மீற்றர் உயரமான இந்த தாமரைக் கோபுரம் 104 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த கோபுரத்தின் நிர்மாணப் பணிக்கான அனைத்து ஆலோசனை சேவைகளையும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் வழங்கி இருந்தனர். இந்த கோபுரத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் மாடிகள் வானொலி மற்றும் தொலைக்காட்சி அலைவரி ஒலிபரப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.3ம் மற்றும் 4ம் மாடிகள் நிகழ்வுகள் மற்றும் விழா மண்டபங்களாக உருவாக்கப்பட்டுள்ளன
கொழும்பு டி. ஆர். விஜயவர்தன மாவத்தையில் பேர வாவிக்கு மிக அருகாமையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இத் தாமரை கோபுரத்தின் நினைவாக இலங்கை தபால் திணைக்களத்தினால் முத்திரை மற்றும் தபால் உறை வெளியிடும் நிகழ்வு இடம்பெற்றது.இந்த முத்திரை 45.00 ரூபா பெறுமதியில் வெளியிடப்பட்டதுடன் இதனை கலைஞர் பசுபிட்டியேஜ் இசுரு சதுரங்க உருவாக்கியுள்ளார்.
சீனாவின் எக்சிம் வங்கிக் கடனின் உதவியுடன் 104 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் இக்கோபுரத்தை அமைக்கும் பணிகள் 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இக்கோபுரமானது பிரான்ஸின் 300 மீற்றர் உயரமான ஈபில் கோபுரத்தினை விட உயரமாக அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
தாமரைக் கோபுரத்தின் அடித்தள பரப்பு 45 மீற்றர்களாகும் என்பதுடன், உயரம் 356 மீற்றர்களாகும். கோபுரத்தின் பிரதான அங்கமாக தொலைத்தொடர்பு உள்ளதுடன், கோபுரத்தின் மேற்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள என்டனா 90 மீற்றர் உயரமானதாகும். இந்த டிஜிட்டல் என்டனா வடக்கே 60 கிலோமீற்றரும் தெற்கே 60 கிலோமீற்றரும் கிழக்கே 50 கி.மீ, மேற்கே 15 கி.மீற்றரும் செயலெல்லையை கொண்டதாகும்.இதில் 20 தொலைக்காட்சி அலைவரிசைகளும் 50 எப்.எம் அலைவரிசைகளும் தொலைத்தொடர்பு செயற்பாட்டாளர்களுக்கு தேவையான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த கோபுரத்தின் நிர்மாணப் பணிகளின் ஆரம்ப திட்டமிடல் 2008ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டதுடன், 2012ஆம் ஆண்டு அதன் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. திட்டத்தின் தலைமை ஆலோசனை மொரட்டுவை பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படுகின்றது.
பொறியியல் துறை கொங்கிரீட் தொழிநுட்பம், உயர்ந்த கட்டிட நிர்மாணத்துறை மின் பொறியியல் போன்ற துறைகளில் நிபுணத்துவம் பெற்ற இலங்கை நிபுணர்கள், பொறியியலாளர்கள் 70க்கும் மேற்பட்டவர்கள் இதற்கு பங்களிப்பை வழங்கிவருவதுடன், அரச தனியார்துறை பல்கலைக்கழகங்களில் கல்விகற்றுவரும் நூற்றுக்கணக்கான பொறியியலாளர்கள், மாணவர்கள் களப் பயிற்சிகளை பெற்றுக்கொள்வதற்கான சிறந்த வாய்ப்பையும் இது ஏற்படுத்திக் கொடுக்கின்றது.
Posting as
No comments:
Post a Comment